வேண்டாம் பிறந்த நாள் விழா! – ரஜினி
‘‘என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். அதற்கு பதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்,’’ என்று ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
65-வது பிறந்தநாள்
நடிகர் ரஜினிகாந்துக்கு வருகிற 12-ந்தேதி 65-வது பிறந்த நாள் ஆகும். கடந்த வருடம் அவர் உடல் நலம் குன்றி இருந்ததால் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடவில்லை. என்றாலும் ரசிகர்கள் முன்பு தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த வருட பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இரண்டு மாதத்துக்கு முன்பிருந்தே செய்து வந்தார்கள். கொடிதோரணங்கள் கட்டுதல், கட்-அவுட், பேனர்கள் அமைத்தல், சுவரொட்டிகள், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தனர்.
விழா ரத்து
ஆனால், பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை ரஜினிகாந்த் திடீர் என்று ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரத்து செய்தனர். ரஜினிகாந்தின் வேண்டுகோள்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் இறங்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து இருந்தனர். அதையும் ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டார்.
-தமிழ்சினிமாலைவ்